நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இயற்கை பேரிடர் மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும், வெளிநாட்டுப் பயணிகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து மத்திய அரசு முழுவீச்சில் உதவிகளை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் உள்ள போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகக் கைலாய யாத்திரை மற்றும் சுற்றுலா சென்ற நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் சாலை மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்களும் அடங்குவர். இவர்களில் பலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையிலும் தவிப்பிலும் ஆழ்ந்துள்ளனர்.
இந்த இக்கட்டான பேரிடர் சூழல் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி, “நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் நமது இந்தியப் பயணிகள், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் சிக்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அங்கு நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து இந்தியர்களையும் வெளிநாட்டினரையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரப்படுத்த வேண்டும். நேபாள பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய உதவிகளைத் துரிதமாக வழங்கி அனைவரையும் பத்திரமாகத் தாயகம் அழைத்து வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை இந்தியத் தூதரகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த மத்திய அரசு அனைத்து நிலைகளிலும் போர்க்கால அடிப்படையில் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.













