அரசுப் பள்ளிகள் தான் எனது கண்கள் என்றும், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் பல்லாயிரம் கோடி ஊழல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் தான் நாம் தற்பொழுது அனுபவித்து வருகிறோம். தெருவெல்லாம் பரவியுள்ள இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன; ஒரு நாள் இவை அனைத்தும் முற்றிலும் சரி செய்யப்படும்” என்று தவெக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற தமிழர்களின் ஆண்டு விழாவில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் பங்கேற்றுவிட்டு, தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையம் திரும்பிய அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களோடு உலகத் தமிழர்களை இணைக்கக் கூடிய பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். பள்ளிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது என்பது இயல்பான மரபுதான். அரசுப் பள்ளியில் ஆய்வு செய்தபோது அமைச்சர் யாரும் வீடியோ எடுக்கவில்லை. ஆய்வு செய்த பெண் அமைச்சர் தமிழ் வழியில் படித்தவர் என்பதால், அங்குள்ள மாணவியின் பின்புலத்தைக் கேட்கக் கூடாது என்றாலும், அவர் ஒரு அக்கா ஸ்தானத்தில் இருந்து அன்புரிமையுடன் கேட்டதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து துறையின் புதிய கல்வி உத்திகள் மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், “அரசுப் பள்ளிகள் தான் எனது கண்கள். அங்குள்ள கழிவறைகள் அனைத்தும் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பதவியேற்றதும் முதல் கையெழுத்துப் போட்டேன். தற்பொழுது தொடக்கக் கல்வியில் 3-ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகங்களை மாற்றியமைத்துள்ளோம்; அவற்றில் உள்ள எழுத்துக்களைக் (Text) குறைத்து, வண்ணப் படங்களை அதிகமாக்கியுள்ளோம். அடுத்தடுத்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல், தனியார் பள்ளிகளுக்கு உரிய அனுமதிச் சான்றிதழ்களைச் சரியான முறையில் வழங்கியதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது; இதனை அரசு எடுத்த ஊழலுக்கு எதிரான மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்க வேண்டும்” என்று விவரித்தார்.
மேலும் கூட்டணிக் கட்சிகள் குறித்துப் பேசிய அவர், “கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தார்மீக நண்பர்களாகப் பார்க்கக் கூடிய கட்சி தவெக. இதுதான் உண்மையான ஜனநாயகம். நாங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தவித நெருக்கடியும் தர மாட்டோம். திருமாவளவனின் சமீபத்திய பேச்சை ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சீர்திருத்தம் மற்றும் கல்வித்துறையின் வெளிப்படைத்தன்மை குறித்த அமைச்சரின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.












