மாமல்லபுரம் அருகே தெற்குபட்டு திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
📍செங்கல்பட்டு: மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் 557-வது ஆண்டு மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கிய விழாவில் தினமும் மகாபாரத சொற்பொழிவுகள் மற்றும் இரவு நேரங்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
🎭 விழாவின் சிறப்பு நிகழ்வாக, 50 அடி நீளத்தில் மண் சிற்பங்களால் துரியோதனன், சகுனி மற்றும் சல்லியன் ஆகியோரின் பிரமாண்ட உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பின்னர், பீமன் மற்றும் துரியோதனன் இடையே நடைபெற்ற போர்க் காட்சியை தெருக்கூத்து கலைஞர்கள் தத்ரூபமாக அரங்கேற்றி, பீமன் துரியோதனனை தொடையில் தாக்கி வீழ்த்தும் மகாபாரத நிகழ்வை உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, காந்தாரி தனது மகன் துரியோதனனை நினைத்து ஒப்பாரி வைக்கும் காட்சியும் பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
🙏 நிகழ்ச்சியின் நிறைவில், பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்த கலைஞர்களை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தெற்குபட்டு, திருவிடந்தை, கோவளம், வடநெம்மேலி, நெம்மேலி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர். இரவு நடைபெற்ற தீமிதி வசந்த உற்சவமும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்குபட்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.












