Advertisement

ஒரு பஸ்சை ஓட்டிட்டு 3 பஸ் ஓடியதா கணக்கு – போக்குவரத்து கழக மோசடி; லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஒரே ஒரு பேருந்தை மட்டும் இயக்கிவிட்டு, மூன்று பேருந்துகள் இயங்கியதாகப் போலி ஆவணங்கள் தயாரித்து டீசல் மற்றும் சம்பளப் பணத்தைச் சுருட்டியிருப்பது கடுமையான குற்றம். உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டு இல்லாமல் இத்தகைய மெகா முறைகேடு நடந்திருக்கவே வாய்ப்பில்லை” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர் முருகேசன், “கடந்த 2022 ஜூலை 16 அன்று வேடசந்தூர் – திருச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஒரே ஒரு பேருந்தில், பயணிகளுக்கு மூன்று வெவ்வேறான வழித்தடங்களின் கணினி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மூன்று பேருந்துகள் இயங்கியதாகப் போலி ஆவணங்களைத் தயாரித்துத் டீசல் செலவு, ஊழியர் சம்பளம் ஆகியவற்றை உயர் அதிகாரிகள் முறேகடு செய்துள்ளனர்” என்று லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்த போக்குவரத்து கழகத் தரப்பு, “முறைகேடு உண்மைதான், தணிக்கையில் இது கண்டுபிடிக்கப்பட்டுக் கிளை மேலாளர் கார்த்திக் ராஜா, இளநிலை உதவியாளர் சிவராஜ் ஆகிய இரண்டு கீழ்மட்ட ஊழியர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என வாதிட்டது.

Advertisement

இந்த வாதத்தைக் கடுமையாகச் சாடிய நீதிபதி பி. புகழேந்தி, “வெறும் இரண்டு கீழ்மட்ட ஊழியர்களை மட்டும் பலிகடா ஆக்கி, இந்த மோசடியை அப்படியே மூடி மறைக்கப் போக்குவரத்து கழகம் முயன்றுள்ளது. இதில் மேலாண் இயக்குநரின் (MD) பங்கு என்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை ஏன் விசாரிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், 14 லட்சம் அரசு ஊழியர்களைக் கண்காணிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வெறும் 100 ஊழியர்களுடன் பெயரளவிற்கே செயல்படுவது வருத்தமளிக்கிறது என்றும் சாடினார். இறுதியாக, இந்த மெகா பஸ் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அதிரடி ஆணை பிறப்பித்தார்.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement