சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள MHAA அரங்கில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் (Lecture Series) நிகழ்ச்சியினை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
சட்டப் பணியின் மாண்பை உயர்த்தவும், இளநிலை வழக்கறிஞர்களுக்குச் சட்ட நுணுக்கங்களைத் தெளிவுபடுத்தவும் இந்தச் சொற்பொழிவுத் தொடர் துவக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை முறைப்படி தொடங்கி வைத்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், நீதித்துறை மேம்பாட்டிற்கும் வழக்கறிஞர் சமூகத்தின் நலனுக்கும் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், சட்ட அறிவைப் புதுப்பித்துக் கொள்வதில் இதுபோன்ற சொற்பொழிவுகள் முக்கியப் பங்காற்றும் என்றும் குறிப்பிட்டார்.
இச்சிறப்பான தொடக்க விழாவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ், துணைத் தலைவர் எஸ். சசிகுமார், செயலாளர் எஸ். அறிவழகன், பொருளாளர் ஜி. ராஜேஷ் மற்றும் மூத்த, இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் உட்படப் ஏராளமான வழக்கறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.












