நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 1000 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தின் இந்த திடீர் முடக்கம் காரணமாக, தமிழக மின்சார வாரியத்தின் தினசரி மின் விநியோக திட்டமிடலில் புதிய நெருக்குடி ஏற்பட்டுள்ளது.
கூடன்குளம் அணுமின் நிலைய நிர்வாக வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகள் மூலம் தினசரி மின் உற்பத்தி செய்யப்பட்டு, தென் மாநிலங்களின் மத்திய மின் தொகுப்பிற்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலாவது அணு உலையின் டர்பைன் மற்றும் நீராவிப் பிரிவில் திடீரென கடுமையான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், அணு உலையின் பாதுகாப்பு விதிகளின்படி, முதலாவது உலையின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டு, 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறையில் இந்திய அணுசக்தி கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் கூடன்குளத்தில் முகாமிட்டுள்ள ரஷ்ய நாட்டு வல்லுநர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். தற்பொழுது நிலவி வரும் தொழில்நுட்ப சிக்கலின் தீவிரத்தை ஆராய்ந்து, பழுதைச் சரிசெய்யும் பணிகளில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டுப் பணியாகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் மின் தேவையை ஈடுகட்ட மாற்று வழிகளில் மின்சாரத்தைப் பெற மின்வாரியம் முயன்று வரும் சூழலில், கூடன்குளத்தின் இந்த 1000 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பு, மின் பகிர்மானத்தில் கூடுதல் கவனத்தைக் கோரியுள்ளது. அணுமின் நிலையத்தின் இந்த திடீர் தொழில்நுட்ப கோளாறு மற்றும் அதனை சரிசெய்யும் விஞ்ஞானிகளின் போராட்டம், தற்பொழுது நெல்லை வட்டாரங்கள் மட்டுமின்றி சமூக ஊடகங்களின் பக்கங்களிலும் விவாதங்களையும் கவலையையும் கிளப்பியுள்ளது.












