Advertisement

கிளாம்பாக்கத்தில் ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: வாலிபர் கைது!

கிளாம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்த பணத் தகராறில் ரவுடியின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விஜய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பணத்தைப் பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், சக ரவுடியின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் (எ) வாண்டு (23) என்பவர் மீது கண்ணகி நகர், ராயப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வீரா (எ) வீரமுத்து என்பவரும் விஜய்யும் சிறையில் இருந்தபோது பழக்கமாகி நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர். சிறையிலிருந்து வெளியே வந்த இருவரும் கூட்டாகச் சேர்ந்து கிளாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்த பணத்தில் வீரா என்பவர் விஜய்க்கு சுமார் ரூ. 30,000 வரை கொடுக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. அந்தப் பணத்தைத் திருப்பித் தருமாறு விஜய் பலமுறை கேட்டும், வீரா கடந்த ஒரு மாதமாகப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் மோதலும் வெடித்தது.

Advertisement

இதில் கடும் ஆத்திரமடைந்த விஜய், கிளாம்பாக்கத்தில் உள்ள வீரா (எ) வீரமுத்துவின் வீட்டிற்கு நேரில் சென்று, தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீட்டின் முன்பகுதியில் வீசி எறிந்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கிளாம்பாக்கம் காவல்துறையினர், தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தப்பியோடிய விஜய்யை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய்யைச் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்படி அவரைச் சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் ரவுடியின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement