Advertisement

சென்னையில் அதிநவீன 5G ஆம்புலன்ஸ் சேவை: காவல் ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்!

சென்னையில் காவேரி மருத்துவமனை சார்பில் 30 அதிநவீன 5G ஆம்புலன்ஸ் சேவையை சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் தொடக்கி வைத்தார்.

சென்னையில் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே தடையில்லா தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்கும் வகையில், காவேரி மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதிநவீன ‘5G Continuous Care Ambulance’ சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் ஏ. அமல்ராஜ் IPS தொடக்கி வைத்தார்.

Advertisement

சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில், காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மணிவண்ணன் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இப்புதிய திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையின் பல்வேறு கிளைகளுக்காக 30-க்கும் மேற்பட்ட அதிநவீன 5G வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆம்புலன்ஸ்களில் அதிநவீன CPMS (Continuous Patient Monitoring System) தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், ஆம்புலன்ஸில் இருக்கும் நோயாளியின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு மற்றும் சுவாச விகிதம் உள்ளிட்ட முக்கிய உடல்நலக் குறியீடுகளை (Vitals) மருத்துவமனையில் இருக்கும் சிறப்பு மருத்துவர்கள் நிகழ்நேரத்தில் (Real-time) துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

Advertisement

அதிவேக 5G இணைய இணைப்பு மூலம் நோயாளியின் முழுமையான மருத்துவத் தகவல்கள் மருத்துவமனைக்கு உடனுக்குடன் பகிரப்படுவதால், ஆம்புலன்ஸில் பயணிக்கும் மருத்துவக் குழுவினருக்கு அவசர சிகிச்சைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் உடனுக்குடன் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க முடியும். குறிப்பாக குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், இதய அடைப்பு, நரம்பியல் பாதிப்பு மற்றும் தீவிர அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த சேவை பெரும் வரப்பிரசாதமாக அமையும். GPS தொழில்நுட்பம் மூலம் அவசர அழைப்பு வரும் இடத்திற்கு அருகிலுள்ள ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் மிக முக்கியமான பொன்னான நேரத்திற்குள் உரிய முதலுதவி சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை ‘ஒன்-டேப்’ (One-Tap) மொபைல் வசதி மூலமும் பொதுமக்கள் எளிதில் பெற முடியும்.

நிகழ்ச்சியில் புதிய சேவையைத் தொடக்கி வைத்துப் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ், “காவேரி மருத்துவமனையின் இந்த 5G ஆம்புலன்ஸ் தொடக்க விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல இக்கட்டான நேரங்களில் நோயாளிகளை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்பதில் தான் அவர்களின் உயிரைக் காப்பது அடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த 5G ஆம்புலன்ஸ் என்பது வெறும் வாகனமாக இல்லாமல் ஒரு நடமாடும் அவசர சிகிச்சை மருத்துவமனையாகவே செயல்படப் போகிறது. நோயாளிகள் ஆம்புலன்ஸை அழைக்கும் போதே அவர்களுக்குத் தேவையான அனைத்து முதலுதவிகளையும் உயர் தொழில்நுட்பத்துடன் வழங்குவது பாராட்டத்தக்கது. சென்னையில் 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஆங்காங்கே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுச் செயல்பட இருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி” எனப் பாராட்டினார்.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement