மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக் கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும், தவெக கூட்டணியில் உள்ளவர்களுக்குச் சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான கனிமொழி கருணாநிதி கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தவெக அரசு கூட்டிய தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாநிலத்தின் உரிமைகள் குறித்துக் கனிமொழி கருணாநிதி எம்பி காரசாரமான கருத்துகளை முன்வைத்தார்.
எவ்வித அவசியமும் இல்லாத சூழலில் தொகுதி மறுவரையறைக் கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடகாவின் முயற்சிக்கும், விவசாயிகள் படும் துயரங்களுக்கும் எதிராகப் போராடாமல், கூட்டணியில் உள்ளவர்களுக்குச் சங்கடம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் இக்கூட்டத்தை கூட்டி நாடகமாடியுள்ளார். இந்தக் கூட்டத்தின் முடிவுகள் என்ன என்பது பற்றி அரசும் முதலமைச்சரும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
கட்சிகளின் பிரதிநிதிகளை அழைப்பதாக இருந்தால் கட்சித் தலைவர்களுக்குத் தான் முறைப்படி அழைப்பு அனுப்ப வேண்டும். ஆனால், தனியாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் அரசுக்காகப் பணியாற்றுகிறாரா அல்லது தவெகவின் தலைமை நிலைய செயலாளராகச் செயல்படுகிறாரா?
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு எவ்விதத்திலும் பழிவாங்கப்படக் கூடாது. பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறையாமல் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை (Fair Delimitation) செய்யப்பட வேண்டும் என்பதில் திமுக தொடர்ந்து உறுதியாக உள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது அனைத்துக் கட்சிகளையும் கூட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தற்போதைய தவெக அமைச்சர் ஆனந்த் கையெழுத்திட்டுள்ளார். அதற்குப் பிறகும் தவெக அரசு எதற்காக இந்த முரண்பாடான கூட்டத்தை நடத்துகிறது? மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்திக்க அழைத்தால் திமுக நிச்சயமாக வரும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யார் யார் எப்படி நடந்து கொண்டார்கள், யார் முதுகில் குத்திய எட்டப்பர்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்பதிலும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும் திமுக தொடர்ந்து முன்னின்று போராடும் எனத் தனது பேட்டியில் கனிமொழி எம்பி நிறைவாகத் தெரிவித்தார்.













