Advertisement

களிவந்தப்பட்டில் புதிய கிளை அஞ்சலகம்; அஞ்சல் சேவைகள் எளிதில் கிடைக்கும்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட களிவந்தப்பட்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிய கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அஞ்சலகம் களிவந்தப்பட்டு பஞ்சாயத்து கட்டடத்தில் செயல்படத் தொடங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுவரை அஞ்சல் சேவைகள், சேமிப்பு கணக்கு தொடர்பான பணிகள், பணப் பரிமாற்ற சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களுக்கான அஞ்சலக சேவைகளை பெற அருகிலுள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டியிருந்தது. குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், களிவந்தப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் வசதிக்காக புதிய கிளை அஞ்சலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் களிவந்தப்பட்டு, கடம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அஞ்சல் சேமிப்பு கணக்கு, பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல், அஞ்சல் பொருட்கள் அனுப்புதல், காப்பீட்டு சேவைகள் உள்ளிட்ட அனைத்து அஞ்சல் துறை சேவைகளையும் தங்களது பகுதியில் இருந்தே பெற முடியும்.

புதிய கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் நேரமும் பயணச் செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிராமப்புற மக்களுக்கு அரசின் பல்வேறு நிதி மற்றும் சமூக நலத் திட்டங்கள் விரைவாக சென்றடையவும் இந்த அஞ்சலகம் உதவியாக இருக்கும்.

Advertisement

இது குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், “பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ள இந்த கிளை அஞ்சலகம் தினமும் காலை 9.45 மணி முதல் மதியம் 1.45 மணி வரை செயல்படும். அனைத்து அஞ்சல் சேவைகளும் வழக்கம்போல வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.

புதிய அஞ்சலகம் தொடங்கப்பட்டுள்ளதை அப்பகுதி மக்கள் வரவேற்று, அஞ்சல் துறைக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement