செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் தி.மு.க பிரமுகரின் மகன் தங்களது ரூ. 3 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட 77 வயது முதியவர் தனது மகன்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் வனஜா (வயது 77). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வனஜா கடந்த 1997-ஆம் ஆண்டு அதே பகுதியில் 10 சென்ட் காலி வீட்டுமனை இடத்தை வாங்கி பத்திரப்படுத்தியுள்ளார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரின் மகன் பிரதீப் மற்றும் மதுரை என்பவர் இணைந்து அந்த 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சாட்டுகிறது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர்கள் தட்டிக் கேட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களை ஆபாசமாகத் திட்டி தரக்குறைவாகப் பேசி தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஆண்டே கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வனஜா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்தரப்பினர் ஆளுங்கட்சியான தி.மு.க-வில் செல்வாக்குடன் இருப்பதால் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறைந்தபட்சம் முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காவல்துறையில் நீதி கிடைக்காததால் தங்களது இடத்தை அளந்து எல்லைக் கற்கள் நட்டு ஆக்கிரமிப்பை மீட்டுத் தருமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியர் வீரப்பன் அவர்களிடம் வனஜா மற்றும் அவரது மகன்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனஜாவின் மகன்கள் நாங்கள் அதிகாரிகளிடம் நிலத்தை அளந்து தரக்கோரி மனு அளித்தால் மனுவில் உள்ள எங்கள் கைபேசி எண்ணை எடுத்துக்கொண்டு இடத்தை விற்பனை செய்கிறீர்களா? எவ்வளவு விலை கொடுத்தால் தருவீர்கள்? என எங்களிடமே நில புரோக்கர்கள் மற்றும் ஒரு சில நபர்கள் பேரம் பேசுகிறார்கள் என அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஆளுங்கட்சி பலத்தால் முதியவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதும் அதற்குச் சாதகமாகக் காவல்துறையும் வருவாய்த்துறையும் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












