மறைமலைநகர் நகராட்சியில் கூட்டரங்கம் பூட்டப்பட்டதைக் கண்டித்து திமுக கவுன்சிலர் மூர்த்தி வாசலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டு அரங்கம் பூட்டப்பட்டதைக் கண்டித்து, திமுக கவுன்சிலர் ஒருவர் நகராட்சி கூட்டரங்க வாசலிலேயே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைமலைநகர் நகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நகராட்சித் தலைவர் சண்முகம் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என அனைத்து கவுன்சிலர்களுக்கும் முன்னதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், 20-வது வார்டு திமுக கவுன்சிலரான மூர்த்தி என்பவருக்கு கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்தோ அல்லது ஒத்திவைக்கப்பட்டது குறித்தோ எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வெளியூரிலிருந்து அவசரமாகக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கவுன்சிலர் மூர்த்தி, கூட்டரங்கம் பூட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, கூட்டம் முன்னரே ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், அதுகுறித்து தலைவர் தெரிவிக்கவில்லையா எனவும் ஆணையர் கேட்டுள்ளார். இதற்கு தலைவர் தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறி, தலைவர் அறையில் இருக்கும்போதே பூட்டிய கூட்டரங்க வாசலில் அமர்ந்து கவுன்சிலர் மூர்த்தி திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் மூர்த்தி, “கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காமல் கவுன்சிலர்களின் நேரத்தை வீணடிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக சட்டப்படி மாதந்தோறும் கூட்டங்களை நடத்தாமல் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. கடந்த இருமுறை நகராட்சித் தலைவர் சண்முகம் தனது சொந்த அறையிலேயே ரகசியமாக மன்றக் கூட்டத்தை நடத்தி முடித்தார். அதேபோல் இன்றும் ரகசியமாக கூட்டத்தை நடத்துகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் நகர்மன்றத்தை அரசு உடனடியாகக் கலைக்க வேண்டும்; தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குற்றம்சாட்டினார். திமுக கவுன்சிலரே தனது கட்சித் தலைவருக்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.













