Advertisement

தவெக அரசை கவிழ்க்க சதி நடக்கிறதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி!

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஆளுங்கட்சியான தவெக-வை வீழ்த்த, எதிர்க்கட்சியான திமுகவும் அதிமுகவும் நேற்று ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்திருப்பது பல்வேறு அரசியல் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சதித் திட்டங்கள் குறித்துப் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய ஆட்சியை விரும்பியே தவெக-விற்குத் தங்களது பேராதரவை வழங்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் இந்தத் தீர்ப்பை மதித்துத் தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே இடதுசாரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தவெக அரசுக்கு வெளியிலிருந்து தங்களது ஆதரவை வழங்கி வருவதாகவும் அவர் விளக்கினார்.

Advertisement

இந்தச் சூழலில், ஆளுநரைச் சந்தித்து தவெக அரசுக்கு எதிராகப் புகார் அளிக்க திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் மாபெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது குறித்துப் பேசிய பெ.சண்முகம், “திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேற்றும் முன்தினமுமாக ஒரே நேர்கோட்டில் ஆளுநரைச் சந்தித்திருப்பது மக்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களைக் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கக் குதிரை பேரம் மற்றும் கழுதை பேரம் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. ஜனநாயகத் தார்மீகத்திற்கு எதிராகவும், மக்களின் தீர்ப்புக்கு எதிராகவும் தவெக ஆட்சியை எவ்வாறாவது கவிழ்க்க வேண்டும் என்று சில சக்திகள் முயல்வது தெளிவாகத் தெரிகிறது” என்று குற்றம் சாட்டினார்.

சட்டமன்ற உறுப்பினர்களைப் பண பலத்தால் இழுக்கும் இத்தகைய குதிரை பேர முயற்சிகள் குறித்துத் தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், புதிய தவெக அரசின் செயல்பாடு குறித்து இப்போதே விமர்சிப்பது அவசரக் குடுடித்தனமானது என்றும், வரவிருக்கும் மாநிலப் பட்ஜெட் மற்றும் அதன் பொருளாதாரக் கொள்கைகளைப் பார்த்த பின்னரே அரசின் ஒட்டுமொத்தப் போக்கைக் கணிக்க முடியும் என்றும் தெரிவித்தார். தவெக அரசுக்கு ஆதரவாக இடதுசாரிகள் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடும், திமுக-அதிமுகவின் ஆளுநர் சந்திப்பு குறித்த சண்முகத்தின் இந்த அதிரடி விமரிசனமும் கோட்டை வட்டாரங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் டிஜிட்டல் பக்கங்களில் தற்போது மாபெரும் அரசியல் அலைகளைக் கிளப்பியுள்ளது.

Advertisement

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement