Advertisement

செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் 4 விபத்துகள்: 3 பேர் உயிரிழப்பு

திருமுடிவாக்கம், காட்டாங்கொளத்தூர், பல்லாவரம் பகுதிகளில் நடந்த தனித்தனி சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், போலீஸ் வாகனமும் விபத்தில் சிக்கியது.

🚛 லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட திருமுடிவாக்கம், காஞ்சனூர் அருகே செந்தில் வாட்டர் சப்ளை பகுதியில் தண்ணீர் லாரியை பின்னோக்கி இயக்க உதவியபோது, லாரியின் பின்சக்கரம் ஏறியதில் சென்ட்ரிங் மேஸ்திரி ஏழுமலை (46) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் தங்கராஜ், லாரியை அங்கிருந்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குரோம்பேட்டை புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

🚗 சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

சதாசிவம் சாலை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேசன் (38), நேற்று அதிகாலை காட்டாங்கொளத்தூர் சிக்னல் அருகே ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் அஷ்வந்த் (20) என்பவரிடம் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🛗 லிப்ட் விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பிரியாணி கடையில் பணியாற்றிய மும்தாஜ் (76), பழைய லிப்ட் மூலம் மேல்மாடிக்குச் சென்றபோது லிப்ட் திடீரென பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது. லிப்ட் கம்பி அறுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார். பல்லாவரம் போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

🚔 போலீஸ் வாகனம் கவிழ்ந்து 2 பேர் காயம்

காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இரவு ரோந்துப் பணியில் சென்ற போலீஸ் நான்கு சக்கர வாகனம் மையத் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் தாம்பரம் மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏ.சி.பி. விஜயனுக்கு கழுத்தில் காயமும், வாகனத்தை ஓட்டிய காவலர் அசோக்குமாருக்கு வலது கையில் சிராய்ப்பும் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement