Advertisement

டாஸ்மாக் பாரில் கள்ளச்சந்தை கட்டிங் விற்பனை: செங்கல்பட்டில் முறைகேடு அம்பலம்!

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் அரசு விதிகளை மீறி சட்டவிரோதமாக ‘கட்டிங்’ மது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.

செங்கல்பட்டு மதுராந்தகம் ஜி.எஸ்.டி சாலையில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையின் கீழ் செயல்படும் பாரில், அரசு விதிமுறைகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு சட்டவிரோதமாக ‘கட்டிங்’ மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

செங்கல்பட்டு பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளில் சில கடைகள் அகற்றப்பட்டு, தற்போது மூன்று கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு 719 மதுபானக் கடைகளை மூடுவதாக அறிவித்த பட்டியலில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைய ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ள கடை, அங்கமுத்து திரையரங்கம் எதிரில் உள்ள கடை மற்றும் மதுராந்தகம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள கடை ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்த மூன்று கடைகளிலும் அரசுக்கு அதிக வருவாய் கிடைப்பதாகக் கூறி, இவற்றைத் தவிர்த்துவிட்டு வேறு கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது இயங்கி வரும் கடைகளில், செங்கல்பட்டு – மதுராந்தகம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள 4303 எண் கொண்ட அரசு மதுபானக் கடையின் கீழ் ஆனந்தன் என்பவர் முறையான டெண்டர் எடுத்து பார் நடத்தி வருகிறார். அரசு விதிகளின்படி, உரிமம் பெற்ற பாரில் மது அருந்துபவர்களுக்கு இடம் ஒதுக்குவதற்கும், சைவ மற்றும் அசைவத் தின்பண்டங்கள், குடிநீர் உள்ளிட்ட இதர பொருட்களை விற்பனை செய்வதற்கும் மட்டுமே அனுமதி உண்டு. அரசு மதுபானக் கடைகளில் குவாட்டர், ஹாஃப் மற்றும் முழு பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement

ஆனால், மதுபானக் கடைகளில் கிடைக்காத ‘கட்டிங்’ எனப்படும் குவாட்டரில் பாதி அளவிலான மது, இந்த பாரில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சரக்கின் ரகத்திற்கு ஏற்ப 90 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு இந்த ‘கட்டிங்’ சரக்கு விற்பனை செய்யப்படுவதால், அரசு கடைக்கு இணையாக இந்த பாரின் உரிமையாளர் கள்ளச்சந்தையில் கல்லாகட்டி வருகிறார். பொதுமக்களின் கண்களுக்குத் தெரிந்தே அரங்கேறும் இந்த சட்டவிரோத விற்பனை, உள்ளூர் காவல்துறையினரின் பார்வைக்குச் செல்லவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement