Advertisement

செங்கல்பட்டில் நாய் கருத்தடை மையப் பணி முடக்கம்

செங்கல்பட்டு நகராட்சியில் தெருநாய்கள் அதிகரித்து வரும் நிலையில், நாய் கருத்தடை மைய கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தமாக நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. இதில் சில நாய்கள் ரேபிஸ் நோய் தாக்கத்துடன் இருப்பதாகவும், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை துரத்தி கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு கருத்தடை செய்ய தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை காலத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

பின்னர் 2024ஆம் ஆண்டு ராமபாளையம் பகுதியில் புதிய கருத்தடை மையம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திட்டம் மாற்றப்பட்டது. அதன்பின் செங்கல்பட்டு நத்தம் பகுதியில் உள்ள நகராட்சி உரக்கிடங்கு வளாகத்தில் புதிய மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

Advertisement

இந்தப் பணிக்காக கூடுதலாக ரூ.5 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆறு மாதங்களாக கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement