ஆலத்தூர் ஏரியில் மண் அள்ள மக்கள் எதிர்ப்பு; பணிகள் நிறுத்தம்

0
3

திருப்போரூர் அருகே உள்ள ஆலத்தூர் பெரிய ஏரியில் மண் எடுக்கும் பணிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மண் எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் அமைந்துள்ள பெரிய ஏரி, அப்பகுதி விவசாய நிலங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டப் பணிகளுக்காக இந்த ஏரியில் இருந்து மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் ஒப்பந்ததாரருக்கு டெண்டரும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் ஏரியில் மண் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இதை அறிந்த ஆலத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

“இந்த ஏரி எங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை வழங்குவதோடு, நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்கிறது. அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் ஏரியில் மண் எடுப்பதை அனுமதிக்க முடியாது” என்று மக்கள் வலியுறுத்தினர்.

இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதுடன், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து வந்த திருப்போரூர் போலீசார் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பிரச்சினை தொடர்பாக இன்று அமைதிக் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏரியில் நடைபெற்று வந்த மண் எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆலத்தூர் ஏரியின் நீராதார பாதுகாப்பு மற்றும் மண் எடுப்பு தொடர்பான இறுதி முடிவு, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்தாலோசிக்கும் அமைதிக் கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.