தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான actor அஜித்குமாரின் 64-வது திரைப்படத்திற்கு ‘டேர் டெவில்’ (Dare Devil) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அத்திரைப்படத்தை அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகும் என எதிர்பார்ப்புகள் நீடித்து வந்தன. இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட மாதக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் மூலம் களமிறங்கும் ஷாலினி அஜித்குமாரின் 34 ஆண்டுகாலத் திரை வாழ்க்கையில் முதன்முறையாகச் சொந்தத் தயாரிப்பில் அவர் களமிறங்கவுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி அஜித்குமார் ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ்’ (Brave Hearts Production) என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘டேர் டெவில்’ படத்தை அதிகாரப்பூர்வமாகத் தயாரிக்கிறார்.
அனிருத் இசையமைப்பில் பிரம்மாண்டக் கூட்டணி இத்திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகப் படக்குழு உறுதி செய்துள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில், “என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்த அஜித் சாருக்கும், தயாரிப்பாளர் ஷாலினி மேடத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார. கார் பந்தயங்களில் சர்வதேச அளவில் சாதனைகளைப் படைத்து வரும் அஜித்குமாரின் நிஜ வாழ்க்கை சாகச பிம்பத்திற்கு ஏற்ப ‘டேர் டெவில்’ என்ற தலைப்பு மிகச் கச்சிதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டு கோடைகாலத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.













