காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அண கட்ட முயலும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தமாக திமுகவே முழுக் காரணம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, தற்போது நாடகமாடும் ஆளுங்கட்சியின் இரட்டை நிலையை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்று அவர் சாடினார்.
செய்தியாளர்களிடம் காரசாரமாக உரையாற்றிய அவர், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த சிவக்குமார் இங்கு வந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டதைச் சுட்டிக்காட்டினார். பிரசார மேடைகளில் அவர் பங்கேற்றபோதே, மேகதாது அணைக் கட்டுவது தொடர்பாகத் திமுக தலைவர்கள் அவரிடம் நேருக்கு நேர் பேசித் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்றும், அப்போது அமைதி காத்துவிட்டு இப்போது காவிரி உரிமை பற்றிப் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
சட்டமன்றக் களத்திலும் மக்கள் மன்றத்திலும் தவெக அரசை நோக்கி விரல் நீட்டும் எதிர்க்கட்சிகள், தங்களின் கடந்த கால வரலாற்றுத் தவறுகளை மறைக்கவே இதுபோன்ற திசைதிருப்பல் அரசியலில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். காவிரியிலும் மேகதாது விவகாரத்திலும் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைத் தவெக அரசு எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காது என்றும், அரசியல் லாபத்திற்காக மக்களை ஏமாற்றும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆதவ் அர்ஜூனா ஆவேசமாகத் தெரிவித்தார்.












