சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) அறிமுகப்படுத்தியுள்ள ‘சென்னை ஒன்’ செயலியில் ரூ.1 டிக்கெட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் ஒருங்கிணைந்த டிக்கெட் வசதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.1,000 மதிப்பிலான சில்வர் பாஸ் மற்றும் ரூ.2,000 மதிப்பிலான கோல்டு பாஸ் ஆகிய மாதாந்திர பயண அட்டைகளையும் ஆன்லைனில் பெறும் வசதி உள்ளது.
புதிய சலுகையின் கீழ், பயணிகள் ‘சென்னை ஒன்’ செயலியில் தங்களது பயணத்தை தேர்வு செய்து, கட்டணம் செலுத்தும் பகுதியில் “Rs.1 Ticket Offer” என்பதை தேர்வு செய்து, CUMTA-வின் UPI கட்டண முறையில் வெறும் ரூ.1 செலுத்தி பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயிலில் ஒருமுறை பயணம் செய்யலாம்.
மேலும், இந்த ரூ.1 டிக்கெட் சலுகையை பயன்படுத்திய பிறகு அதே UPI முறையின் மூலம் வாங்கப்படும் அடுத்த 6 டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அறிமுகமான ‘சென்னை ஒன்’ செயலி மூலம் தற்போது மெட்ரோ, மின்சார ரயில், மாநகர பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் வசதி உள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு வசதி, கல்லூரி மாணவர்களுக்கான சீசன் பஸ் பாஸ் வசதி ஆகியவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மின்சார ரயில் மாதாந்திர சீசன் டிக்கெட் மற்றும் நடைமேடை (Platform) டிக்கெட் பெறும் வசதியையும் சென்னை ஒன் செயலியில் கொண்டு வர ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




