தமிழகத்தில் தவெக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை மேலாண்மை மீதான வெள்ளை அறிக்கையில், பிரச்சினைகள் குறித்த பகிர்வுகள் அதிகம் இடம்பெற்று இருக்கிறதே தவிர அதற்கான தீர்வுகள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு 211 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றும், இதுபோன்ற அறிக்கைகள் பொது விவாதத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதாக அமைய வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஒரு நோய்; ஆறு அறிகுறிகள்” என்று மாநில அரசின் கடன் பொறுப்பு, வருவாய்ப் பற்றாக்குறை உள்ளிட்ட தகவல்களை இந்த அறிக்கை பகிர்ந்து கொண்டுள்ளதே தவிர, எதிர்காலத்தில் அவை எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பது பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாக உள்ளன என்றும், 211 பக்க அறிக்கையில் “முன்னோக்கிச் செல்லும் வழி” என்பதற்கு இரண்டு பத்திகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோய் அறிகுறிகள் மட்டுமின்றி அதைத் தீர்க்கும் மருந்துகளும் முக்கியம் என்பதைத் தவெக அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறித்துப் பேசிய பெ.சண்முகம், ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு நிறுத்தியது மற்றும் செஸ், சர்சார்ஜ் வரிகள் மூலம் மாநிலங்களை வஞ்சித்து வருவதைக் குறிப்பிடாமல் ஒரு மாநிலத்தின் நிதிநிலை ஆய்வு அறிக்கை முழுமையடையாது என்று கறாராகத் தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் கடன் திறனைக் கட்டுப்படுத்தி, அவற்றின் செயல்பாடுகளை முடக்கும் மத்திய அரசின் தார்மீகக் கொள்கைகளுக்கு இந்த வெள்ளை அறிக்கை முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, வெறும் நோய் அறிகுறிகளை மட்டுமே பேசாமல், மாநிலங்களின் நிதிக் கூட்டாட்சியைச் சிதைக்கும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்ட வேண்டும் என்றும், மக்கள் மீது கூடுதல் பாரத்தை ஏற்றாமல் வருவாய்ப் பெருக்கத்திற்கான மாற்றுத் தீர்வுகளை நோக்கி அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெ.சண்முகம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.





