மறைமலைநகர் மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களின் மேற்கூரை மற்றும் ஏற்றிச் செல்லப்படும் பொருட்களின் மீது அமர்ந்து தொழிலாளர்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறை பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
செங்கல் லோடு லாரிகள், தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தொழிலாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், காஞ்சிபுரம் சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
வாகனங்களின் மேற்கூரையில் அல்லது சரக்குகளின் மீது அமர்ந்து செல்லும் போது, சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகள் மற்றும் பிற தடைகளில் உரசி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் திடீர் பிரேக், வாகன கவிழ்ச்சி அல்லது கட்டுப்பாட்டை இழக்கும் சூழல்களில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கப்படுகிறது.
கடந்த வாரம் கட்டுமானப் பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், சாலையை கடக்க நின்றிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




