தாம்பரத்தில் அதிரடி சோதனை: 20 பேர் கைது; 18 கடைகளுக்கு சீல்

0
3

தாம்பரம் மாநகர போலீசார் பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கும் நோக்கில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் 18 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து, மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 121 பள்ளிகளின் சுற்றுவட்டார பகுதிகளில் 360 போலீசார் மற்றும் 16 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து 40 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் அதிகம் கூடும் பகுதிகள், பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் சிறிய வணிக வளாகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், சோதனையில் சுமார் 90 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 18 கடைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்தனர்.

பள்ளி மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்கவும், போதைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.