மாமல்லபுரம் அருகே பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்து இருபுறங்களிலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் விரிவான ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு, மணமை மற்றும் குன்னத்தூர் பகுதிகள் வழியாக பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை சமவெளியாக இருந்த இந்த பகுதிகள் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்டு, கால்வாயின் இருபுறங்களிலும் ஏராளமான இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காரணமாக நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பலமுறை வருவாய்த் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் தாலுகா ஜமாபந்தி நிகழ்வில் மணமை ஊராட்சி முன்னாள் தலைவர் வீராசாமி மனு அளித்ததைத் தொடர்ந்து, தாசில்தார் தேவேந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அரசு நிலங்களை ஆக்கிரமித்து பரந்த பரப்பளவில் இறால் பண்ணைகள் செயல்பட்டு வருவது தெரியவந்தது. மேலும், கால்வாய் நீரை ராட்சத குழாய்கள் மற்றும் மின்சார மோட்டார்கள் மூலம் உறிஞ்சி பயன்படுத்தி வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இறால் பண்ணைகள் கிராமப்புற பொருளாதாரத்திற்கு வருவாய் ஈட்டினாலும், அனுமதியின்றி மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி செயல்படும் பண்ணைகள் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால், விரைவில் முழுமையான ஆய்வு நடத்தி விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





