பிளாஸ்டிக் பாட்டில்களில் கலைப்பொருட்கள் உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்

0
3

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி உருவாக்கிய கலைப்பொருட்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

செங்கல்பட்டு மாவட்டத்தின் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், சுற்றுலாத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு புராதன சின்னம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி தூக்கி வீசிய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மாணவர்கள் சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்து பல்வேறு கலைப்பொருட்களாக வடிவமைத்தனர். குறிப்பாக முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ராட்சத தேள் மற்றும் அரக்கன் வடிவ சிற்பங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

பள்ளி திறந்த இரண்டாவது நாளிலேயே மாணவர்கள் இத்தகைய படைப்பாற்றலை வெளிப்படுத்தியதை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். பிளாஸ்டிக் கழிவுகளின் தீமைகள் மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்வதன் அவசியம் குறித்து நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் சுற்றுலா பயணிகள், வணிகர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சி பாராட்டுகளை பெற்றது.

நிகழ்ச்சியின் நிறைவில் சிறப்பாக கலைப்பொருட்கள் உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.