செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சுற்றித்திரிவதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் கீழ் வெண்பாக்கம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வல்லம், மேலமியூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீபகாலமாக திருட்டு, கொள்ளை முயற்சி மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், இரவு நேரங்களில் முகமூடி அணிந்த சிலர் கிராம வீதிகளில் சுற்றித்திரிவதாகவும், வீடுகளை நோட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் தனியாக வசிக்கும் குடும்பத்தினர் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வெளியில் செல்ல மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், கிராமங்களில் காவல் துறை ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தகவல்களை சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பாமல் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் செங்கல்பட்டு சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





