Advertisement

சிங்கப்பெருமாள் கோயிலில் 6646 கிலோ கஞ்சா எரிப்பு: முதல்வர் காணொளியில் ஆய்வு!

வடக்கு மண்டலத்தின் 10 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 6,646 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் அருகே எரியூட்டி அழிக்கப்பட்டன.

வடக்கு மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 6,646 கிலோ கஞ்சா மற்றும் 125 கிலோ போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள், காவல் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள தனியார் ஆலையில் எரியூட்டி அழிக்கப்பட்டன.

Advertisement

தமிழ்நாடு காவல்துறையின் வடக்கு மண்டல எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராகத் தீவிர வேட்டை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 11,700 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள் (125 கிலோ 500 கிராம்), 6,646 கிலோ எடை கொண்ட கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் அபின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் நீதிமன்றத்தின் முறையான அனுமதியுடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘ஜிஜே என்க்ளேவ்’ என்ற எரியூட்டும் தனியார் நிறுவனத்தில் இவை அனைத்தும் கொண்டு வரப்பட்டன. தாம்பரம் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் (IGP) மற்றும் ஆவடி காவல் இணை ஆணையர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் போதைப் பொருட்கள் அனைத்தும் நவீன உலைகளில் இட்டு முழுமையாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையையும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளிக் காட்சி (Video Conferencing) வாயிலாக நேரடியாகப் பார்வையிட்டார்.

Advertisement

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆண், பெண் காவலர்கள் என ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் காவல்துறையினர் முன்னெடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement