நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் கோரிக்கை

0
3

செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் மற்றும் வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படாமல் தரிசாக கிடக்கும் நிலங்களில் செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக பாலாற்று பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்கள், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களை அழித்து வருவதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படுவதைத் தவிர நிரந்தர தீர்வு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மும்முனை மின் இணைப்பு நள்ளிரவு 12 மணிக்கு மட்டுமே வழங்கப்படுவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும், சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அதேபோல் கிளாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளப்பந்தல் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.