Home செங்கல்பட்டு ‘விளைநிலம் காப்போம்’ இயக்கம்: சித்தாமூரில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வு

‘விளைநிலம் காப்போம்’ இயக்கம்: சித்தாமூரில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வு

0

சித்தாமூர் பகுதியில் இயற்கை விவசாயம் மற்றும் சமச்சீர் உர பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், வேளாண் துறை சார்பில் ‘விளைநிலம் காப்போம்’ இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்தாமூர் வட்டத்திற்குட்பட்ட அகரம், வன்னியநல்லூர், ஈசூர், கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இயற்கை விவசாய முறைகளை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, பசுமை உரங்களின் பயன்பாடு, பயிர் மாற்று சாகுபடி முறைகள், நீர் சேமிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், ரசாயன உரங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மற்றும் அவற்றின் அதிகப்படியான பயன்பாட்டால் மண் வளம் குறைவது உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக இயற்கை உரங்கள் மற்றும் உயிரியல் விவசாய முறைகளை பின்பற்றுவதன் மூலம் மண் வளத்தையும், விளைச்சல் தரத்தையும் மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் நிலையான விவசாய முறைகளை பின்பற்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, இயற்கை விவசாயம் தொடர்பான சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். நிகழ்ச்சி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version