Home செங்கல்பட்டு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்கள்: செங்கல்பட்டு நிர்வாகம்

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்கள்: செங்கல்பட்டு நிர்வாகம்

0

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த திட்டத்தின் மூலம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரண நிவாரண உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட எட்டு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நலத்திட்டங்களை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரிபவர்கள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெற தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் செயல்முறையை எளிமையாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இணையதள வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்கள் மற்றும் பதிவு தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version