Advertisement

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள்.. பேருந்துகள் அவதி!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் உள்ளே சென்று வெளியேறுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஓ.எம்.ஆர் சாலையை ஒட்டி அமைந்துள்ள திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

பேருந்து நிலையத்தை ஒட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் மூலம் பராமரிக்கப்படும் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 150 முதல் 200 வரை இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இருப்பினும், பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மக்கள் மற்றும் சென்னை நோக்கி பயணம் செய்பவர்கள் தங்களது வாகனங்களை அதிகாரப்பூர்வ நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல், பேருந்து நிலைய வளாகத்திலேயே நிறுத்தி செல்கின்றனர்.

மேலும் சிலர் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களையும் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்துவதால் பேருந்துகள் திரும்பிச் செல்லவும், பயணிகளை ஏற்ற இறக்கவும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் உருவாகி பயணிகள் அவதியடைகின்றனர்.

Advertisement

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும், விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement