செய்யூர் அடுத்த தண்டரை பகுதியில் வயல்வெளி மின்மோட்டார்களில் பொருத்தப்பட்டுள்ள மின்ஒயர்களை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடிச் செல்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
200 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் 🌾
செய்யூர் அருகே தண்டரை கிராமத்தில் பாலாற்றங்கரையோரம் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார்கள் மூலம் விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வயல்வெளிகளில் உள்ள மின்மோட்டார்களில் பொருத்தப்பட்ட மின்ஒயர்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் திருடிச் செல்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர் திருட்டால் விவசாய பணி பாதிப்பு 🚨
மின்ஒயர் திருட்டு குறித்து காவல் நிலையங்களில் பலமுறை புகார் அளித்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மின்ஒயர்கள் திருடப்படுவதால் மின்மோட்டார்களை இயக்கி விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சில விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் இரவு நேரங்களில் காவல் காக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை 📢
கோடை வெயிலால் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மின்ஒயர்கள் திருடப்படுவது விவசாயிகளுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். ஒரு காயில் மின்ஒயர் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு விவசாய கிணற்றுக்கு 6 முதல் 8 காயில்கள் வரை தேவைப்படுவதாகவும் அவர்கள் கூறினர். கடந்த சில நாட்களில் தாமோதரன், பெருமாள், சம்பத், கோதண்டராமன் உள்ளிட்ட பலரது மின்மோட்டார்களில் இருந்த மின்ஒயர்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே, தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









