Advertisement

சிங்கபெருமாள் கோவில்: மதுப்பிரியர்கள் தொல்லை… மக்கள் குமுறல்

சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையோரத்தில் செயல்படும் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் ஏற்படுவதாக கூறி, அவற்றை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🚨 நெரிசலால் விபத்து அபாயம்

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜி.எஸ்.டி., சாலையோரத்தில் செயல்படும் இரண்டு அரசு மதுக்கடைகளால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

⚠️ மீண்டும் செயல்படும் மதுக்கடைகள்

சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலை மேம்பாலம் மற்றும் திருத்தேரி பகுதியில் இரண்டு மதுக்கடைகள் சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன. நெடுஞ்சாலையை ஒட்டி மதுக்கடைகள் அமைப்பது தொடர்பாக 2023ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த இரண்டு கடைகளும் கொளத்தூர் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், மதுக்கடைகள் முன்பு செயல்பட்ட அதே இடத்தில் மீண்டும் இரண்டு கடைகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

🏫 மாணவர்களும் பொதுமக்களும் அவதி

மதுக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்வதால், நெரிசல் மிகுந்த பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள இப்பகுதியில் மதுக்கடைகள் செயல்படுவதால் மாணவ–மாணவியர் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையோரத்தில் செயல்படும் இரண்டு மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement