செங்கல்பட்டில் பெண்கள் உட்பட ஐந்து பேரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., நகர செயலர் நரேந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு மாவட்ட நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.
⚖️ காரை அகற்ற கூறியதால் தகராறு
செங்கல்பட்டு அடுத்த பாலுார் மலையாள தெருவைச் சேர்ந்த ரேகா, 45, கடந்த 22ம் தேதி தனது பேரனுக்கு நகை வாங்குவதற்காக உறவினர்களுடன் காரில் செங்கல்பட்டு நகருக்கு வந்தார். அப்போது, செங்கல்பட்டு நகர தி.மு.க., செயலர் நரேந்திரன், 59, என்பவரின் உணவகம் முன் காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நரேந்திரன் காரை அங்கிருந்து அகற்றுமாறு ரேகாவிடம் கூறியுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
🚔 4 பேர் கைது
இந்த தகராறில் நரேந்திரனின் ஆதரவாளர்கள் ரேகா உள்ளிட்ட மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, நரேந்திரன், சந்தோஷ்கண்ணன், 46, மோகன், 43, சூரியா, 34, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
🏛️ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நரேந்திரன் உள்ளிட்டோர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ரோஸ்லின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கிய நீதிபதி, இரண்டு வாரங்களுக்கு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.








