Advertisement

பூங்கா ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகை, போன் மீட்பு: பொன்னேரி தம்பதியிடம் ஒப்படைப்பு!

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பொன்னேரி தம்பதியினர் தவறவிட்ட நகை மற்றும் செல்போன்கள் இருந்த கைப்பையை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் மீட்டு ஒப்படைத்தனர்.

பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பரத் குமார் என்பவர், பழைய நகைகளை மாற்றுவதற்காகத் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் மின்சார ரயிலில் நேற்று சென்னை சென்ட்ரல் வந்தார். அங்கிருந்து தியாகராய நகர் செல்வதற்காகப் பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து செல்லும் மின்சார ரயிலில் ஏறிப் பயணம் செய்தனர்.

Advertisement

ரயில் சிறிது தூரம் சென்ற பிறகு, பரத் குமாரின் மனைவி தனது கைப்பையைப் பூங்கா ரயில் நிலையத்திலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். அந்தப் பையில் இரண்டு செல்போன்கள், இரண்டு சவரன் நகை மற்றும் 500 ரூபாய் பணம் ஆகியவை இருந்தன.

இதனிடையே, பூங்கா ரயில் நிலையத்தில் பிளாட்பார ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவல்துறையினரிடம் அந்த கைப்பை கிடைத்தது. அவர்கள் அந்தப் பையைக் கைப்பற்றி எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பையைத் தவறவிட்டது குறித்துப் புகார் அளிப்பதற்காகப் பரத் குமார் தம்பதியினர் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்தனர்.

Advertisement

அப்போது, காவல்துறையினர் தாங்கள் கண்டெடுத்த கைப்பையைக் காண்பித்து விசாரணை நடத்தினர். பையில் இருந்த பொருட்கள் குறித்த விவரங்களைச் சரிபார்த்து, அது பரத் குமார் தம்பதியுடையதுதான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு நகை மற்றும் செல்போன்கள் இருந்த கைப்பையை ஒப்படைத்தனர். பையை மீட்டுக் கொடுத்த ரயில்வே காவல்துறையினருக்குத் தம்பதியினர் நன்றி தெரிவித்தனர்.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement