செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பையனூரைச் சேர்ந்த பட்டதாரி ஜோடியான ஆகாஷ் – திவ்யா திருமணம், பல்லவ மன்னர்களின் பாரம்பரிய திருமண முறையை மீண்டும் உயிர்ப்பித்த வகையில் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நவீன மற்றும் ஆடம்பர திருமணங்களுக்கு மத்தியில், 1000 ஆண்டுகளுக்கு முன் பல்லவ அரசர்கள் நடத்திய திருமணத்தை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை வழங்கிய இந்த நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. திருமணத்திற்கு முன் மணமக்கள் இருவரும் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் இருந்து பழங்கால பல்லக்கில் அரை கிலோமீட்டர் தூரம் தூக்கி வரப்பட்டனர்.
திருமண மண்டப நுழைவாயிலில் மயிலிறகு, பனை ஓலை விசிறி, வெண்சாமரம் மற்றும் ரோஜா மலர் தூவலுடன் ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. மேற்கத்திய இசை, டிஜே மற்றும் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு பதிலாக செண்டை மேளம், மத்தளம் மற்றும் நாதஸ்வர இசை முழங்கியது.
மணமக்கள் ராஜா-ராணி தோற்றத்தில் சிறப்பு ஆடைகளை அணிந்திருந்தனர். மணமகன் கையில் செங்கோலும், மணமகள் கையில் பூச்செண்டுக்கு பதிலாக கத்தியும் ஏந்தியிருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேடையில் சிவன்-பார்வதி உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு, அவற்றின் முன்னிலையில் திருமண உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முழுக்க முழுக்க பல்லவ மன்னர்களின் சைவ பாரம்பரியம் மற்றும் தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பிரதிபலித்த இந்த திருமணம், மாமல்லபுரம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பழமையைப் போற்றும் இந்த வகை திருமணங்கள், நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த முயற்சியாக பாராட்டப்படுகின்றன.
