செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த ஜூன் 15ஆம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை பயன்படுத்தி பெண் பயணியிடம் செயின் பறிப்பு முயற்சி நடைபெற்றது.
தூத்துக்குடியைச் சேர்ந்த அசுதா என்ற பெண் பயணி, ரயில் நின்றிருந்தபோது தனது இருக்கையிலிருந்து வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் மர்மநபர் ஒருவர் பெட்டிக்குள் நுழைந்து அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். பெண் கூச்சலிட்டதால், சங்கிலியின் ஒரு பகுதியை மட்டும் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, சிக்னல் கோளாறு இயற்கையாக ஏற்படவில்லை என்பதும், ரயில் சிக்னல்களின் பச்சை விளக்குகள் துணியால் மறைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ரயிலை நிறுத்தவோ அல்லது மெதுவாக இயக்கவோ செய்து, பயணிகளிடம் நகை மற்றும் பொருட்களை பறிக்கும் திட்டமிட்ட கொள்ளை முறையை போலீசார் கண்டுபிடித்தனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரை போலீசார் அடையாளம் கண்டனர். பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் இவர், இரவு நேரங்களில் ரயில் பயணிகளை குறிவைத்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, ராயபுரம், பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட பல ரயில்வே காவல் நிலையங்களில் இவர்மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் வெளியே வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து குமரேசனை தாம்பரம் ரயில்வே போலீசார் கைது செய்து, திருடப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை முடிந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
