சென்னையில் குறைந்த விலைக்கு பழைய பைக் விற்பனை செய்வதாக ஆன்லைனில் போலி விளம்பரம் செய்து, வாங்க வருபவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் (25), போரூரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு பைக் தேவைப்பட்டதால், ஆன்லைனில் பழைய பைக் விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து தனது நண்பர் முகேஷ் (22) உடன் மவுலிவாக்கம் பகுதிக்கு சென்றார்.
அங்கு மாங்காட்டைச் சேர்ந்த லோகேஷ் (24) என்பவர், தன்னிடம் பைக் இருப்பதாகவும், முன்பணம் கொடுத்தால் வாகனத்தை வழங்குவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பைக்கை பார்க்காமல் பணம் தர முடியாது என அஸ்வின் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து லோகேஷ் தனது நண்பர்களை அழைத்த நிலையில், அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அஸ்வின் மற்றும் முகேஷை தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராகுல் (28), ராஜேஷ் (20), தங்கராஜ் (24), லோகேஷ் (24), அருண் (20), விக்னேஷ்வர் (22), பாலா (21), பன்னீர்செல்வம் (25) ஆகிய 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆன்லைனில் பைக் விற்பனைக்கு இருப்பதாக போலி விளம்பரம் செய்து, வாங்க வருபவர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த கும்பலின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




