திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறும் புள்ளிவிவரங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருச்சி விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி-யுமான துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய அவர், தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள் என்றும், பல துறைகளில் சில தவறுகள் நடந்ததன் காரணமாகத் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்றும் கூறினார். இந்தச் சூழலில், தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் புதிய திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்துத் தவெக அரசு ஆலோசனை செய்து முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக-விலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி வருவது குறித்த கேள்விக்கு, அதிமுக-வில் எம்.எல்.ஏ-க்களாகத் தேர்வானவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் தவெக-வில் இணைந்துள்ளனர் என்றும், தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் விலகுவது ஏன் என்பதை அதிமுக தலைமைதான் ஆராய வேண்டும் என்றும் பதிலளித்தார். பாஜக போல தவெக-வும் வாஷிங் மெஷின் தானா என்ற விமர்சனத்திற்கு, வாஷிங் மெஷின் விமர்சனம் மற்றும் குதிரை பேரம் குறித்த விமர்சனங்கள் அனைத்துக் கட்சிகள் மீதும் உள்ளது என்றும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான நபர்கள் தவெக-வில் இணையும் போது தவெக தலைமை கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் குறித்துப் பேசிய துரை வைகோ, மதிமுக-வைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் எங்கள் கட்சி கிடையாது என்றும், அவர்கள் எங்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு திமுக-வில் இணைந்து அதன் பின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்கள் திமுக-வைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் விளக்கமளித்தார். எனினும் அவர்கள் தற்பொழுது எங்கள் கட்சியில் இருக்கிறார்கள், சூழலுக்கு ஏற்ப என்ன முடிவெடுப்பது என்பது குறித்து ஆலோசிப்போம் என்றும், எங்களுடைய பொதுக்குழுவில் கூட்டணி குறித்தான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், கடந்த காலங்களைப் போலவே கடந்த ஒரு மாதமும் பாலியல் குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன என்றும், அவை முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். தவெக அரசும் அதற்கான பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கறாராகத் தெரிவித்தார். மேலும், வைகோ மற்றும் ஆதவ் அர்ஜுனா சந்திப்பில் எந்த அரசியலும் பேசப்படவில்லை என்றும், தவெக-வும் திராவிட இயக்கம் தான் என்றும், அதிமுக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த வேலையை நாங்கள் செய்கிறோம் எனத் தவெக-வினர் கூறுவது உண்மைதான் என்றும் கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.













