செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள், கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதியின்றி ரேஷன் கடை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக எழுந்துள்ள புகார் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 665 மாணவ, மாணவியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வருகின்றனர். பள்ளி திறக்கப்பட்ட சில நாட்களிலேயே விளையாட்டு மைதானம் அருகே சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை கண்ட பெற்றோர், முதலில் அது பள்ளி வளர்ச்சி தொடர்பான பணியாக கருதினர்.
ஆனால் பின்னர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் எந்த கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அங்கு ரேஷன் கடை கட்டப்படுவதாகவும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளி வளாகத்திற்குள் பிற துறைகளின் கட்டிடங்கள் அமைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும், இந்த கட்டுமானம் மாணவர்களின் பாதுகாப்பு, விளையாட்டு மற்றும் கல்விச் சூழலை பாதிக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் நிலையில், ஆய்வுக்கூடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ரேஷன் கடை கட்டுமானப் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
