செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு புறநோயாளிகள் காத்திருக்கும் பகுதியில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் ஆலோசனை மற்றும் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
இந்நிலையில், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவின் புறநோயாளிகள் காத்திருக்கும் பகுதிக்குள் தெருநாய்கள் கூட்டமாக தங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோயாளிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக அறுவை சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து, மருத்துவமனை வளாகத்தில் தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோயாளிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
