மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரையிலான கடலோர சுற்றுலா வழித்தடத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரையிலான கடலோரப் பகுதியை சுற்றுலா வழித்தடமாக மேம்படுத்தும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுற்றுலா பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முந்தைய தி.மு.க., அரசு, இப்பகுதியை கடலோர நீல பொருளாதார சுற்றுலா வழித்தடமாக அறிவித்திருந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் முதல் இடைக்கழிநாடு வரை இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதிகள் அமைந்துள்ளன. சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட பல்லவர் கால பாரம்பரிய நினைவுச் சின்னங்களை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினத்தில் 17-ம் நூற்றாண்டில் நெதர்லாந்து வணிகர்களால் அமைக்கப்பட்ட டச்சு கோட்டை வளாகமும் உள்ளது. ஆங்கிலேயர் படையெடுப்பால் கோட்டை பெருமளவு சிதைந்த நிலையில், எஞ்சிய பகுதிகளை தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
செய்யூர் அருகே முதலியார்குப்பத்தில் பகிங்ஹாம் கால்வாயில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து வருகின்றனர். ஆலம்பரைகுப்பம், வாயலூர்–கடலூர் இடையேயான பாலாற்று தடுப்பணை, ஓதியூர் பகுதி, மரக்காணம் உப்பங்கழி முகத்துவாரம் உள்ளிட்ட இடங்களும் இயற்கை சுற்றுலாவுக்கு ஏற்ற பகுதிகளாக உள்ளன.
மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரை கடற்கரை, பழமையான கோட்டை, நீர்நிலைகள், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வாய்ப்புகள் உள்ளதால், இப்பகுதியில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் அதிகளவில் குவிகின்றனர். எனவே, தனியார் பங்களிப்புடன் கடலோர சுற்றுலா வழித்தடத் திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுலா வளர்ச்சியுடன் உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாமல்லபுரம்–புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் நிலையில், சுற்றுலா வழித்தடத் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்தினால் இரு திட்டங்களும் ஒன்றுக்கொன்று பயனளிக்கும். எனவே, மாமல்லபுரம்–மரக்காணம் கடலோர நீல பொருளாதார சுற்றுலா வழித்தடத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணியரும் எதிர்பார்க்கின்றனர்.











