செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள எரிவாயு நுகர்வோர்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போது அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக எந்தத் தொகையையும் செலுத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது சிலிண்டரின் எடையில் சந்தேகம் இருந்தால், விநியோக பணியாளரிடம் எடைபோட்டு காண்பிக்குமாறு நுகர்வோர்கள் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடைபோட்ட பின்னர் சிலிண்டரில் எடை குறைவு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த சிலிண்டரை ஏற்காமல் திருப்பி வழங்கி, மாற்று சிலிண்டரை பெறும் உரிமை நுகர்வோருக்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், எரிவாயு சிலிண்டரை வாங்கும் போது அதில் பாதுகாப்பு சீலுடன் கூடிய உறை (Seal Cap) முறையாக உள்ளதா என்பதை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீல் சேதமடைந்திருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ அந்த சிலிண்டரை ஏற்காமல் உடனடியாக முகவரிடம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும், பாதுகாப்பான எரிவாயு பயன்பாட்டை உறுதி செய்யவும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
