மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் உடல், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பண்ணை இல்லத்தில் 24 காவலர்கள் 72 குண்டுகள் முழங்கத் தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் திசையை ஸ்டியோக்களில் இருந்து கிராமத்து மண் வாசனைக்கு மாற்றி அமைத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் உடல், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள அவரது பண்ணை இல்லத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை காலமான அவரது உடலுக்குப் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, அவரது உடல் நேற்று இரவே அவரது சொந்த மண்ணான தேனிக்குக் கொண்டு வரப்பட்டது. தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் அமைந்துள்ள அவரது பண்ணை இல்லத்தில் இன்று காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்குத் தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி அரசு ஆகியோர் நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கருணாஸ் மற்றும் திரை உலகப் பிரபலங்களான பாக்யராஜ், வடிவேலு, ராதிகா, சுகாசினி, பார்த்திபன், அமீர், சமுத்திரக்கனி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது பிரியமான இயக்குநருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
மதியத்திற்கு மேல் பாரதிராஜா அவர்களின் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் பக்தி சிரத்தையுடன் செய்து முடிக்கப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டது. அப்போது, மறைந்த மகா கலைஞனின் கலைச் சேவையைப் பாராட்டும் விதமாகத் தமிழக ஆயுதப்படை போலீசாரின் உள்கட்டமைப்பு ஒழுங்குமுறைப்படி, 24 காவலர்கள் தலா மூன்று குண்டுகள் வீதம் மொத்தம் 72 குண்டுகளை வானை நோக்கி முழங்கச் செய்து முழு அரசு மரியாதை அளித்தனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் காலை முதல் நல்லடக்கம் முடியும் வரை பாரதிராஜாவின் இறுதிப் பயணத்தில் அவருடனே இருந்து தங்களது தார்மீக மரியாதையைச் செலுத்தினர். இமாலயச் சாதனை படைத்த ஒரு மகா கலைஞனின் உடல் மண்ணோடு கலந்தாலும், அவரது காவியங்கள் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும்.




