ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ செயலிகளில் பயணம் தொடங்குவதற்கு முன்பே டிப்ஸ் கேட்கும் வசதியை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற வாடகை வாகனச் செயலிகளில், பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே ‘முன்பண டிப்ஸ்’ (Advance Tip) கேட்கும் அம்சத்தை உடனடியாக நீக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மொபைல் போன் செயலிகள் மூலம் இயங்கும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் போது, பயணத்தை முன்பதிவு செய்யும்போதே “டிப்ஸ் அளித்தால் வாகனம் விரைவில் கிடைக்கும்” அல்லது “டிரைவர் எளிதில் ஒப்புக்கொள்வார்” போன்ற விருப்பங்கள் செயலிகளில் காட்டப்பட்டு வந்தன. இது பயணிகளுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும் கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்துவதாக நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்குப் பல்வேறு புகார்கள் குவிந்தன.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களின்படி (Motor Vehicle Aggregator Guidelines 2025) பயணம் முடிவடைவதற்கு முன்பாக எந்தவொரு முன்பண டிப்ஸ் கேட்கும் அம்சத்தையும் காட்டக்கூடாது எனத் தெரிவித்து உள்ளது. பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகு, பயணியின் சேவை திருப்தியின் அடிப்படையில் மட்டுமே விருப்பப்பட்டால் டிப்ஸ் வழங்கும் வசதி இடம்பெற வேண்டும் என மத்திய அரசு தனது விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.













