தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை முற்றிலும் ஏமாற்றமளிப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் இந்த பட்ஜெட்டுக்குத் தாம் ‘பூஜ்ஜியம்’ (Zero) மதிப்பெண் வழங்குவதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிப் பொறுப்பேற்று 85 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு புதிய திட்டத்தையும் இந்த அரசு கொண்டுவரவில்லை எனத் தெரிவித்தார். “தேர்தலுக்கு முன்பாக மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளைகள், ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எனப் பல்வேறு பிரம்மாண்ட வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். ஆனால், பட்ஜெட்டில் அவை குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. வெறும் வீர வசனங்களையும் ரீல்ஸ்களையும் பேசியே காலத்தைக் கழித்து வருகின்றனர்.” என்று எடப்பாடி பழனிசாமி சாடினார்.
மேலும், ஏற்கெனவே அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் கொண்டுவரப்பட்ட பழைய திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி, வெறும் ஸ்டிக்கர் ஒட்டிப் பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். மாநிலத்தில் கடன் சுமை ரூ.10.98 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கான எவ்விதத் தெளிவான திட்டமிடலும் இல்லாமல் அரசு இயங்கி வருவதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.









