மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) சமூக வலைதளப் பயனர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற ‘பு சுனைதா’ (Bu Sunaidah) என்ற மனித வடிவ ரோபோ, தனது காதலியான ‘மொசா’ (Moza) என்ற மற்றொரு ரோபோவை எமிரேட்ஸின் பாரம்பரிய முறைப்படி ‘திருமணம்’ செய்து கொண்ட நிகழ்வு இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு மனித உருவ ரோபோக்களின் இந்த வினோதக் கல்யாணம், துபாயில் அரங்கேறியுள்ளது. மணப்பெண் ரோபோவான ‘மொசா’வுக்கு எமிரேட்ஸின் பாரம்பரிய கருப்பு மற்றும் தங்க நிற ‘அபாயா’ (Abaya) ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், மணமகன் ‘பு சுனைதா’ மற்றும் விழாவில் பங்கேற்ற மனிதர்கள் அரேபியப் பாரம்பரிய உடையான ‘கந்தூரா’ (Kandura) அணிந்து இந்த விழாவை விமர்சையாகக் கொண்டாடியுள்ளனர்.
இது குறித்துத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தரப்பில் விசாரிக்கையில், இது சட்டப்பூர்வமான அல்லது மத ரீதியான உண்மையான திருமணம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. ‘Unitree G1’ ரகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு ரோபோக்களையும் உருவாக்கிய நிறுவனம், மக்களிடையே தங்களின் அதிநவீன ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்தவும், அதை உள்ளூர் கலாச்சாரத்தோடு சுவாரஸ்யமாக இணைத்துக் காட்டவும் செய்த ஒரு புதுமையான விளம்பர உத்தி (PR Stunt) இதுவாகும்.
இருப்பினும், ரோபோக்களின் இந்தத் திருமணக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, “நாங்கள் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறோம், அதற்குள் ரோபோவுக்குத் திருமணம் முடிந்துவிட்டதே!” என்று உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர்.













