பாடி அசத்திய செங்கல்பட்டு காவலர்கள்: எம்.ஜி.ஆர் பாடலோடு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டிய ‘சிங்கப்பெண்கள்’!

0
3

செங்கல்பட்டில் ‘சிங்கப்பெண்’ திட்ட காவல் உதவி ஆய்வாளர் தேவிகா தலைமையிலான பெண் காவலர்கள், போக்குவரத்து நெரிசலைச் சீரமைத்ததோடு, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகப் பகுதிகளில் நிலவிய கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சீர்படுத்தியதோடு, மாணவிகள் மத்தியில் பாசத்தோடு பாடி அசத்தலாக விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ காவலர்களின் கம்பீரப் பணி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உன்னத நோக்கில், தமிழக அரசால் அண்மையில் “சிங்கப்பெண் திட்டம்” (Singappen Project) அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது. அதன் உள்கட்டமைப்பு நீட்சியாக, செங்கல்பட்டு மாவட்டக் காவல் எல்லையில் மதுராந்தகம், மகாபலிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மூன்று உட்கோட்டங்களில் (Sub-Divisions) இத்திட்டம் தற்பொழுது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்து பள்ளிகள் அமைந்திருப்பதால், பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சிங்கப்பெண் காவல் உதவி ஆய்வாளர் (SI) தேவிகா தலைமையிலான பெண் காவலர்கள் களமிறங்கிச் சீர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற சிங்கப்பெண் காவலர்கள், மாணவிகளுக்குப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது மாணவிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற தத்துவப் பாடலான “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைத் தான் மண்ணில் பிறக்கையிலே…” என்ற பாடலைப் பாடி நிகழ்வைத் துவக்கினர். தொடர்ந்து மாணவிகளிடம் பேசிய உதவி ஆய்வாளர் தேவிகா, “மாணவிகள் தேவையின்றிச் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்; சமூக ஊடகங்களில் தங்களது புகைப்படங்களையோ அல்லது சுயவிவரங்களையோ (ID) எக்காரணம் கொண்டும் பதிவு செய்யக் கூடாது; அறிமுகமில்லாத நபர்களுக்குத் தங்களது அலைபேசி எண்களைக் கொடுக்கக் கூடாது” எனப் பல்வேறு நடைமுறை ஆலோசனைகளை வழங்கி விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்தார். விழிப்புணர்வுடன் விவேகமாகச் செயல்பட்ட செங்கல்பட்டு சிங்கப்பெண்களின் இந்த உன்னதப் பணி மாணவிகளைக் பெரிதும் கவர்ந்துள்ளது.