“எழுத்துப்பூர்வ உத்தரவின்றி விடுவிப்பதா? கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!

0
4

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று கண்டன முழக்கங்களை எழுப்பி அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தங்கப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் விக்டர் சுரேஷ்குமார் மற்றும் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் குமரன் ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டு தங்களது கண்டன உரையைத் பதிவு செய்தனர்.

செங்கல்பட்டு வருவாய் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்ட பணியிடமான காஞ்சிபுரம் வடக்கு உதவி மேலாளர் (சில்லரை விற்பனை) டாஸ்மாக் பணியிடத்திற்கு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தியோகபூர்வ உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட வட்டாட்சியர் ஒருவர் பணியில் சேர்ந்திருந்தார். ஆனால், எவ்வித எழுத்துப்பூர்வமான உத்தரவும் இன்றி, வாய்மொழி உத்தரவு மூலம் மட்டும் அவரை அப்பணியிடத்தில் இருந்து திடீரென விடுவித்துள்ளனர். மேலும், விதிகளுக்குப் புறம்பான முறையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குரிய அந்தப் பணியிடத்தில் வேறு மாவட்ட வருவாய் அலுவலர் சார்ந்த வட்டாட்சியரை டாஸ்மாக் நிர்வாகம் நியமித்துள்ளது.

வருவாய்த்துறை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட டாஸ்மாக் மேலாண் இயக்குநர் (MD TASMAC), பொது மேலாளர் (GM TASMAC ADMIN) மற்றும் மேலாண் இயக்குநரின் நேர்முக உதவியாளர் ஆகியோரைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தீவிரமாக நடைபெற்றது. “செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் பணியிடத்தை மீட்டெடுக்க ஒன்றாகுவோம்” என்ற அதிரடி முழக்கங்களை எழுப்பிய வருவாய்த்துறை அலுவலர்கள், தங்களது உரிமைகளைப் பறிக்கும் அதிகாரிகளின் இத்தகைய போக்கிற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் விறுவிறுப்பும் சலசலப்பும் நிலவியது.