செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 583 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளும் சேர்த்து மொத்தம் 1,164 ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண்ணை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், தமிழக அரசின் சேவை இணையதளமான thesevai.tn.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வசிப்பிடம் அல்லது விவசாய நிலம் அமைந்துள்ள கிராமமும், மண் எடுக்கப்பட உள்ள நீர்நிலை அமைந்துள்ள கிராமமும் ஒரே வருவாய் வட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்காக விண்ணப்பிப்பவர்கள் விவசாய நிலம் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO) மூலம் அவர்களின் தொழில் நிலை உறுதி செய்யப்பட்ட பின்னர் அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்டு திருப்திகரமாக இருந்தால், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் 10 நாட்களுக்குள் அனுமதி வழங்குவார். அனுமதி பெற்றவர்கள், தொடர்புடைய நீர்நிலையின் பொறுப்பு அலுவலர்களை அணுகி, ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே வண்டல் மண் அல்லது களிமண்ணை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த திட்டத்தை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
